மாநகராட்சி பள்ளியில் 30 பேருக்கு செல்வமகள் கணக்கு துவக்கம்
கோவை; மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பெண் குழந்தைகள் 30 பேருக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்கப்பட்டது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டலம், வார்டு எண்.53, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள, 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் 30 பேருக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், கணக்குகள் துவங்கப்பட்டன. கணக்கு துவங்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதற்கு உண்டான முதல் தவணை தொகை ரூ.250 வீதம் 30 கணக்குகளுக்கு, 7,500 ரூபாயை, ரேஸ்கோர்ஸ் துணை அஞ்சலக அதிகாரி மாலதி, தானே முன்வந்து செலுத்தி, பள்ளி குழந்தைகளுக்கு துவக்கி வைத்தார். இம்முயற்சியை பாராட்டிய, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர், பொதுமக்கள், செல்வமகள் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் எனவும், அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுக வேண்டும் எனவும், அழைப்பு விடுத்துள்ளார்.