உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலூரில் அமைகிறது செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை; தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து நிறைவேற்ற முடியுமா?

சூலூரில் அமைகிறது செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை; தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து நிறைவேற்ற முடியுமா?

கோவை; கோவை மாவட்டம் சூலூர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செமி கண்டக்டர் ஆலைகள் நிறுவப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில்துறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், தண்ணீருக்கான தேவையைப் பூர்த்தி செய்வது பெரும் சவாலாக இருக்கும் என, கருதப்படுகிறது.செமி கண்டக்டர் என்பது ஒரு வகையான 'சிப்'. நவீன தொழில்நுட்பத்தின் மூளையே இதுதான். செல்போன், லேப்டாப், டி.வி., கேமரா, கார், விமானம், ரேடார், ட்ரோன், ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், மின்சார வாகனங்கள் என, எலெக்ட்ரானிக்ஸ் பயன்பாடு எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் செமி கண்டக்டர் பயன்படுத்தப்படுகிறது.வரும் 2030ல், செமி கண்டக்டருக்கான சந்தை மதிப்பு 1 டிரில்லியனைத் தாண்டக்கூடும்.ஏ.ஐ., மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆப் திங்ஸ், 5ஜி, ஜி.பி.யூ.,க்கள் என அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் செமி கண்டக்டர் தேவை. சுருக்கமாக சொன்னால், செமி கண்டக்டர் இல்லாமல் எந்த நவீன தொழில்நுட்பமும் இல்லை.இந்தியா உட்பட உலக நாடுகள் செமி கண்டக்டர்களுக்கு சீனாவையும், தைவானையும் சார்ந்திருக்கின்றன. இதில் தற்சார்பை எட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து, உற்பத்தி ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை, தமிழக அரசால் கோவை, திருப்பூரில் துவக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

வேலைவாய்ப்பு

இந்த ஆலைகளால் செமி கண்டக்டர் இன்ஜினீயர்கள், கெமிக்கல், மெக்கானிகல் மற்றும் எலெக்ட்ரிகல் இன்ஜினீயர்கள், டெக்னீஷியன்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்ந்தவர்கள், குவாலிட்டி கன்ட்ரோலர்கள், லாஜிஸ்டிக்ஸ், பாதுகாப்பு பணியாளர்கள் என ஏராளமானவர்கள் நேரடி வேலைவாய்ப்பைப் பெறுவர். மேலும், தொழிற்சாலை சார்ந்து மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும். இந்த சுற்றுப்பகுதியும் பொருளாதார வளர்ச்சி பெறும்.

சவாலான தண்ணீர் தேவை

செமி கண்டக்டர் தொழிற்சாலைக்கு நன்னீர் அதிகம் தேவைப்படும். சிலிக்கான் வேபர் தயாரிப்பு, குளிர்விப்பு , எட்சிங், லித்தோகிராபி என பல்வேறு கட்டங்களிலும் நன்னீர் பயன்படுத்தப்படும்.இந்த நன்னீரானது, யூ.பி.டபிள்யூ., எனப்படும் அதிசுத்தமான நீராகும். இது, குடிநீரை விட பல மடங்கு தூய்மையானது. மிகச்சிறிய அளவிலான அசுத்தம் கூட, செமி கண்டக்டரை பாதிக்கும் என்பதால், அதிதூய்மையான நன்னீர் தேவைப்படுகிறது. அதுவும், தினமும் கோடிக்கணக்கான லிட்டர் நன்னீர் தேவைப்படும்.எனவேதான், நீர்வளம் நிறைந்த பகுதிகளுக்கு அருகில் இந்த ஆலைகள் அமைக்கப்படுகின்றன. குஜராத்தில் கட்டப்பட்டு வரும் 'மைக்ரான்' செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு நர்மதா நதியில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது.

சூலூர், பல்லடம்

சூலூர் மற்றும் பல்லடத்தில் தனித்த நீராதாரங்கள் பெரிய அளவில் இல்லை. இந்த நகரங்களுக்கு, பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து நீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில், செமி கண்டக்டர் ஆலைகளுக்கு அதிக நன்னீர் தேவைப்படும் என்பது பெரிய சவாலாக இருக்கக்கூடும். எடுக்கப்படும் தண்ணீர் ஆர்.ஓ., டியோனைசேஷன், யூ.வி., உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும். எனினும், நீர்த் தேவையை போதுமான அளவு பூர்த்தி செய்து இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

CBE CTZN
மார் 15, 2025 12:34

ஆறு குளம் குட்டை மலைகள் இவற்றை பாதுகாக்கமல்... ஏற்கனவே நொய்யல் அதன் ஜீவனை இழந்து கிடக்கிறது... பவானிக்கு இடையூறு ஏற்படுத்த தயாராகி கொண்டிருக்கிறார்கள்... மக்களுக்கு சுத்தமான தண்ணீரை குடுக்க துப்பிலாத மத்திய மாநில அரசுகள் வளர்ச்சி என்று எதை கட்டமைக்கிறார்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை