வீடு மற்றும் தோட்டங்களில் தொடர் திருட்டு; ஒருவர் கைது
தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் சுற்று பகுதியில் வீடுகளில் நகையும், தோட்டங்களில் மின் மோட்டார் ஒயர்களையும் திருடி வந்த நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தொண்டாமுத்தூர், வாய்க்கால் வழிச்சாலையில் உள்ள தோட்டத்து வீட்டில், ராமாத்தாள்,79 என்பவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ராமாத்தாளின் வீட்டில் இருந்த, சுமார் 60 பவுன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணம் மாயமானது. ராமாத்தாள் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராமாத்தாளின் வீட்டில் வாடகைக்கு இருந்த சந்தானம்,26 என்பவர், ராமாத்தாள் குடும்பத்துடன் வெளியில் சென்ற போது, வீட்டின் பின் பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்து, பணம் மற்றும் நகையை திருடியது தெரிய வந்தது. தொண்டாமுத்தூர் போலீசார், சந்தானத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ராமாத்தாள் வீடு மற்றும் ஆலாந்துறையில் உள்ள வீடு என, இரண்டு வீடுகளில் நகை திருடியதும், கலிக்கநாயக்கன்பாளையம், கீழ் சித்திரைச்சாவடி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மின் மோட்டார் ஒயரை திருடியதும் தெரியவந்தது. திருடிய நகைகளை, காந்தி புரத்தில் உள்ள நகைக்கடையில் விற்று, ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். 33 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.