கோவை:மதுரை-கோவை முன்பதிவில்லா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை, போடிநாயக்கனூர் வரை நீட்டிக்க வேண்டும். மேலும், ராமேஸ்வரம்-கோவை இடையே, புதிய இன்டர்சிட்டி ரயில் சேவை துவக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுதொடர்பாக, போத்தனூர் ரயில் பயணிகள் சங்கம் சார்பில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் அளிக்கப்பட்ட மனு:கடந்த காலங்களில் கோவையில் இருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி, போடி நாயக்கனூர், மதுரை, செங்கோட்டை, திண்டுக்கல், பொள்ளாச்சி நகரங்களுக்கு மீட்டர்கேஜ் பாதையில், ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.இதில், கோவை ராமேஸ்வரம் ரயில் தவிர, மற்ற ரயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்பட்டன. மக்கள் தொகை பெருகியுள்ள நிலையில், ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் புதிய சேவைகள் துவக்கப்படவும், நீட்டிக்கப்படவும் இல்லை.எனவே, ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு, மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் வழியாக இன்டர்சிட்டி இயக்கப்பட வேண்டும்.அதேபோல, மதுரை வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரல், போடிநாயக்கனூர வரை நீட்டிக்கப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை, ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.