| ADDED : மார் 04, 2025 12:23 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்- நீலகிரி எக்ஸ்பிரஸ் பழமையான ரயில் பெட்டிகள், நேற்று தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. பழைய ரயில் பெட்டிகளுக்கு குட்பை சொல்லி அனுப்பப்பட்டது.மேட்டுப்பாளையத்தில் இருந்து, சென்னைக்கு, நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில் இயக்கப்படுகிறது. இதில் தினமும், 2,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த ரயிலில் கால நிலைக்கு ஏற்றார் போல், ரயில் பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் மாற்றி வந்தது. மிகவும் பழமையான ஐ.சி.எப்., பெட்டிகளை கொண்டு, கடந்த பல ஆண்டுகளாக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், ரயில்வே நிர்வாகம், புதிய அதிநவீன வசதிகளுடன் கூடிய, எல்.எச்.பி., பெட்டிகளை, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இயக்க அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நேற்று முதல் இந்த புதிய பெட்டிகளை இணைத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கியது. இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து புதிய பெட்டிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.அதனால் மிகவும் பழமையான ஐ.சி.எப்., பெட்டிகள், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, தனது கடைசி பயணத்தை நேற்று முடித்துக்கொண்டது.