அரங்கநாதர் கோவிலில் இன்று திருக்கல்யாண வைபவம்
மேட்டுப்பாளையம், காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரை சுற்றி வைக்கப்படும் தடுப்புகள், புதிய மூங்கில்களால் கட்டப்பட்டுள்ளன. அதற்கு வண்ண பேப்பர்களால் அலங்காரம் செய்யப்பட்டன. நேற்று காலை தேர் அலங்கார தடுப்புகளுக்கும், கோபுர மகுடத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து முதலில் தேர் மீது, கலசம் தாங்கிய மகுடம் ஏற்றப்பட்டது. சுற்றிலும் அலங்கார தடுப்புகள் ஏற்றி வைத்து, அலங்காரம் செய்தனர். அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். கோவில் வளாகத்தில் வலம் வந்து, தேர் செல்லும் நான்கு ரத வீதிகளிலும், திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று கோவிலில் இருந்து பெட்டத்தம்மன் மலைக்குச் சென்று, அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். இன்று காலை, 5:30 மணிக்கு கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. நாளை (12ம் தேதி)அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருள உள்ளார். மாலை, 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. 13ம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், 14ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் (பொறுப்பு) பேபி ஷாலினி, அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.