ரோடு விஸ்தரிப்புக்கு ஏற்ற ரவுண்டானா இல்லை போக்குவரத்து போலீசார் திணறல்
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், ரோடு விஸ்தரிப்புக்கு ஏற்ற அளவில் ரவுண்டானா இல்லாததால், வாகன நெரிசல் ஏற்படுவதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்னர்.பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நிலம் கையகப்படுத்தப்பட்டு, 34.51 கோடி ரூபாய் நிதியில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மழைநீர் வடிகால், சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.தவிர, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், மரப்பேட்டை பாலம், தேர்நிலையம், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில், 'ரவுண்டானா' அமைக்கப்பட்டது.ஆனால், நான்கு ரோடு சந்திப்புகளான பஸ் ஸ்டாண்ட் மற்றும் காந்திசிலை பகுதிகளில், வாகன நெரிசல் குறைந்தபாடில்லை. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து போலீசாரால், வாகனங்கள் முறைப்படுத்தப்பட்டு, நிறுத்தி அனுப்பப்படுகிறது.இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:பெரிய அளவிலான நகரங்களில், ரவுண்டானாவுக்கு ஏற்றாற்போல், ரோடுகளின் விஸ்தரிப்பு காணப்படும். அருகே எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில், கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.அப்போது, 5 முதல் 6 வரையிலான ரோடுகளை இணைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க முடியும். ஆனால், பொள்ளாச்சி நகரில், ரோடு விஸ்தரிப்புக்கு ஏற்ற அளவில் ரவுண்டானா கிடையாது.நான்கு ரோடு சந்திப்புக்கு 'சிக்னல்' மட்டுமே அவசியம். பெரிய அளவிலான கனரக வாகனங்கள் செல்லும் போது, நான்கு வழித்தடங்களிலும், வாகன போக்குவரத்தை நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது.மூன்று ரோடுகளை இணைக்கும் ரவுண்டானா பகுதியில், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதில்லை. நகராட்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து போலீசார் ஒன்றிணைந்து திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.