குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கு முயற்சியுங்க!
பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்கள், ஆண்டு இறுதி தேர்வில், 35க்கும் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை குறிப்பிட்டு, அடுத்த வகுப்புக்கு முன்னேற செய்ய வேண்டும் என்பதே பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு.இதனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில், முறையான கற்றலில் ஈடுபடாத மாணவர்களும், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு முன்னேறி விடுகின்றனர். அவர்களுக்கு, பத்தாம் வகுப்பில், அடிப்படை எழுத்து மற்றும் வாசிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.குறிப்பாக, பொதுத் தேர்வில், குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்காக முயற்சிக்க வேண்டும் என, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் சிலர், தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் கல்வி பயில்கின்றனர். ஆனால், பெரும்பாலான மாணவர்கள், தமிழை முழுமையாக வாசிக்கவும், எழுதவும் திணறுகின்றனர். கூட்டல், கழித்தல் என கணிதத்தின் அடிப்படை கற்றல் திறனை இழந்துள்ளனர்.இவர்களுக்கு, வழக்கமான பாட வகுப்புகள் நடத்தியும் பலனில்லாமல் உள்ளது. அதனால், பொதுத்தேர்வை மையப்படுத்தியே பாடங்கள் நடத்தப்படுகிறது. வரும், 20ம் தேதி பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், ஒவ்வொரு பாடத்திலும் முழு மதிப்பெண் பெறுவதில் சிரமம் கொள்வர். அதனால், தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்காவது முயற்சிக்க வேண்டும் என, ஆலோசனையும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.