மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை கோவை வருகை; பலத்த பாதுகாப்பு
கோவை; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வருவதை முன்னிட்டு, 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும், 31வது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர், கோவை வருகின்றனர்.இன்று இரவு கோவை வரும் அமைச்சர் அமித்ஷா, நாளை காலை கோவை மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை, ஈஷா யோகா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். இரவு, ஈஷா மையத்தில் தங்கும் அமித்ஷா, மறுநாள் காலை ஹெலிகாப்டர் வாயிலாக, கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து உத்தரபிரதேசம் செல்கிறார்.அமித்ஷா வருகையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் 4,000, மாநகரில், 3,000 என, மொத்தம், 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்தும், போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர். ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வெளியூர் வாகனங்களை சோதனையிட, மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள, செக்போஸ்ட்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.