உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வள்ளி கும்மி நடனம் உடலுக்கு ஆரோக்கியம் தரும்

வள்ளி கும்மி நடனம் உடலுக்கு ஆரோக்கியம் தரும்

மேட்டுப்பாளையம் : 'வள்ளி கும்மி நடனம், உடலுக்கு ஆரோக்கியம் தரும்,' என, பயிற்சி ஆசிரியர் முருகையன் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் தாலுகாவில், வள்ளி கும்மி நடனம் பிரபலமடைந்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பெண்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இந்த வள்ளி கும்மி நடனத்தை கற்று, அரங்கேற்றி வருகின்றனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் நகரில், நடூர் பகுதியை சேர்ந்த மகளிர், இளம் பெண்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர் வள்ளி கும்மி நடனத்தை கற்க விரும்பினர். பயிற்சி ஆசிரியர் முருகையன், பெண்களுக்கு வள்ளி கும்மி நடனத்தை, நடூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் பயிற்சி அளித்தார். இதன் அரங்கேற்ற நிகழ்ச்சி, அபிராமி தியேட்டர் வளாகத்தில் நடந்தது. இதில் புதிதாக பயிற்சி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் என, 100 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வள்ளி திருமணம் கதையில் உள்ள, 33 பாடல்களுக்கு வள்ளி கும்மி நடனம் ஆடினர். இதுகுறித்து பயிற்சி அளித்த ஆசிரியர் ஜே.டி. முருகையன் கூறியதாவது. கும்மி நடனத்தை கற்க மக்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. அதனால் வயது வித்தியாசம் இல்லாமல், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, பயிற்சி பெற்றனர்.ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விதமான நடனம் என்பதால், உடலை வளைத்து நெளித்து, குனிந்து, நிமிர்ந்து, கும்மியடித்தல் என, பல்வேறு வகையில் நடன நிகழ்ச்சி அமைந்துள்ளன. இந்த நடனத்தால் உடல் ஆரோக்கியம் பெறும். மனதிற்கு தெளிவு கிடைக்கும். இவ்வாறு ஆசிரியர் கூறினார். அரங்கேற்ற நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ