உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திரும்பிய பக்கமெல்லாம் விதிமீறல்!

திரும்பிய பக்கமெல்லாம் விதிமீறல்!

பொள்ளாச்சி, உடுமலை நகரப்பகுதியில், வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப சாலை விரிவாக்கம், முக்கிய சந்திப்புகள் மேம்பாடு, 'பார்க்கிங்' வசதிகள் இல்லை என்றே கூற வேண்டும்.முக்கிய பகுதிகளில், சாலை விரிவாக்கம் செய்து, ரவுண்டானா அமைத்தாலும் பலனில்லை. குறுகலாக ரவுண்டானா அமைத்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது.போக்குவரத்து பிரச்னை தீராத நிலையில், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமுறைகளை கடைபிடிக்காததால், விபத்துகளும் அதிகரிக்கிறது.டூ வீலர், கார், வேன் உள்ளிட்ட தனிப் பயன்பாடு மற்றும் வாடகை வாகனங்களின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். விதிமீறும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.இருப்பினும், ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, 'சீட் பெல்ட்' அணியாமல் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, அதிக எடையை ஏற்றுவது, மொபைல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது, சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் செல்வது, ஒருவழிப்பாதையில் செல்வது, இடையூறாக வாகனங்களை நிறுத்துவது என, விதிமீறல் தொடர்கிறது.இதற்கு, வாகன ஓட்டுநர்களுக்கு சுய கட்டுப்பாடும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதிருப்பதே முக்கிய காரணம், என, போலீசார் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

'ஒன்வே'யில் அத்துமீறல்

கிணத்துக்கடவு பகுதியில், கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காததால் அதிக விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, 'ஒன் வே' பாதையில், அதிக வேகமாக வாகனத்தை இயக்கும் போது, விபத்து நடக்கிறது.கிணத்துக்கடவு பகுதியில், கடந்த ஆண்டில், சாலை விபத்தில், -48 பேர் காயமடைந்தனர். ஏழு சாதாரண விபத்துகள் ஏற்பட்டது. சாலை விபத்தில், 22 பேர் இறந்தனர். மொத்தம், 70 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தரம் உயர்வு

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், வாகனங்கள் எண்ணிக்கை உயர்ந்ததால், உடுமலையில் செயல்பட்டு வந்த பிரிவு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகமாக கடந்த 2022ல், தரம் உயர்த்தப்பட்டது. அதற்கேற்ப பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், போக்குவரத்து விதிமீறல்களில் எவ்வித மாற்றமும் இல்லை.

பஸ் நுழையாத ஸ்டாண்ட்

மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டினுள் அனைத்து பஸ்களும் சென்று வர வேண்டும். ஆனால், தற்போது வரை, டவுன் பஸ்களை தவிர மற்ற அனைத்து வெளியூர் பஸ்களும், தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தப்பட்டு, பயணியரை ஏற்றிச் செல்கின்றன.இந்த விதிமீறலை, வட்டார போக்குவரத்து துறையினர் கண்டுகொள்வதில்லை.நகருக்குள் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் மீதான நடவடிக்கையும் கண்துடைப்பாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலும், விதிமீறல்களும் பல மடங்கு அதிகரித்து, மக்களை பதற வைக்கிறது.உடுமலை போக்குவரத்து போலீசார் சார்பில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக,கடந்த ஆண்டு, 1,440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிவேகம், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு, 20 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது.

மாற்றம் தேவை

வால்பாறைக்கு சுற்றுலா வாகனங்கள் வருகை அதிகமுள்ளது. அதற்கேற்ப 'பார்க்கிங்' வசதி இல்லாததால், ரோட்டையே 'பார்க்கிங்' பகுதியாக மாற்றி விட்டனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வால்பாறை சப்-டிவிஷனில், போக்குவரத்து விதிமீறலுக்காக, மொத்தம், 22,753 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.நெரிசலுக்கு தீர்வு காண, கனரக வாகனங்கள், வெளியூர் செல்லும் பஸ்கள் பழைய வால்பாறை, ரொட்டிக்கடை வழியாக இயக்க வேண்டும். இருசக்கர வாகனங்கள் வளையல் கடை வீதி வழியாக மாற்று வழிப்பாதையில் இயக்க வேண்டும். அப்போது தான், வாகன நெரிசலுக்கும், விதிமீறலுக்கும் நிரந்தர தீர்வு காண முடியும்.

565 டிரைவிங் லைசென்ஸ் ரத்து!

பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., வாயிலாக, கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை வருமாறு:எப்.சி., இல்லாமல் வாகனங்கள் இயக்கியது - 492, டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் இயக்கியது - 427, வாகனத்தின் பின்புறம் ஒளிரும் சிவப்பு பட்டைகள் பொருத்தாமல் இயக்கியது -- 178, அதிக பாரம் ஏற்றியது -- 143, ெஹல்மெட் அணியாமல் இயக்கியது - 68 என, 1,308 விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல, மதுபோதையில் வாகனம் இயக்கியது -- 278, விபத்தால் உயிரிழப்பு ஏற்படுத்தியது -- 91, சிக்னலில் நிற்காமல் இயக்கியது -- 60, மொபைல்போன் பேசியவாறு வாகனம் இயக்கியது -- 49, அதிக எடை மற்றும் ஆட்களை ஏற்றியது - 23, என, 565 பேரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி