கோவை புறநகரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகரில், ஹிந்து முன்னணி சார்பில், 63 இடங்களிலும், பொதுமக்கள் சார்பில், 17 இடங்களிலும், அகில பாரத ஹிந்து மகா சபா சார்பில் ஐந்து இடங்களிலும் என மொத்தம், 85 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.காரமடையில் ஹிந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில், 170 இடங்களிலும், சிறுமுகையில், 85 இடங்களிலும் என, மொத்தமாக, 340 இடங்களில், விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டன. மூன்று நாட்கள் விளக்கு பூஜை உள்பட, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். பொதுமக்கள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் வைத்த விநாயகர் சிலைகள், நேற்று முன்தினம் மாலையிலும், நேற்று காலையிலும் பவானி ஆற்றில் கரைத்தனர்.ஹிந்து முன்னணி சார்பில் வைத்த விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம், நேற்று மாலை நடந்தது. ஹிந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளை அலங்காரம் செய்து, வாகனங்களில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். சி.டி.சி., டெப்போ அருகே, காரமடை சாலையில் அனைத்து விநாயகர் சிலைகளும் வரிசையாக நிறுத்தினர். ஊர்வலம் துவக்க விழாவுக்கு, ஹிந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், துணைத்தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்.ஜி.வி.மாதையன், கோவை மாவட்ட பூண்டு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் காவிக் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். சிலைகள் ஊர்வலத்தின் முன்பாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சீயூரைச் சேர்ந்த சிவகங்கா கலாசமதி குழுவினர் செண்டை மேளம் அடித்துச் செல்ல, அதை தொடர்ந்து சேவல், வண்ணத்து பூச்சி, மயில் வேஷம் போட்டவர்கள் ஆடிச் சென்றனர்.விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு மூன்று டி.எஸ்.பி.,க்கள், பத்துக்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு இலக்கு படை, ஆயுதப்படை, பேரிடர் மீட்பு குழு, கமாண்டோ குழுவினர், வெடிகுண்டு கண்டறிதல் குழுவினர், போலீசார், ஊர்க்காவல் படையினர் என, 600 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலம் தொடங்கி அபிராமி தியேட்டர் எதிரே வந்தடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் பாராளுமன்ற விவகார இணை அமைச்சர் முருகன், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன் ஆகியோர் பேசினர். அதைத் தொடர்ந்து மீண்டும் ஊர்வலம், காரமடை சாலை, ஊட்டி சாலை வழியாக சுப்ரமணியர் கோவிலை அடைந்தது. வழி நெடுகிலும் வாணவேடிக்கை நடந்தது. விநாயகர் சிலைகள் அனைத்தும், பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. காரமடை நகரம் மற்றும் மேற்கு பகுதியில் வைத்த அனைத்து விநாயகர் சிலைகளும், ஊர்வலமாக எடுத்துச் சென்று, வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றில் கரைத்தனர். அதேபோன்று சிறுமுகை மற்றும் சிறுமுகை கிழக்கு பகுதியில் வைத்த விநாயகர் சிலைகள் அனைத்தும், சிறுமுகை நகர் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று, பழத்தோட்டம் அருகே பவானி ஆற்றில் கரைத்தனர். அன்னுார்
அன்னூர் வட்டாரத்தில், நேற்று மாலை 5:00 மணிக்கு அன்னூர், ஓதிமலை ரோட்டில், பாத விநாயகர் கோவில் முன்புறம் விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. கிராமங்களில் இருந்து ஆறு அடி உயரம் முதல் 12 அடி உயரம் வரை உள்ள 45 விநாயகர்கள் கொண்டு வரப்பட்டன.ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரதீப் குமார், கார்த்தி ஆகியோர் விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இதையடுத்து தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக மீண்டும் பாத விநாயகர் கோவிலை ஊர்வலம் அடைந்தது.ஊர்வலத்தில் ஹிந்து முன்னணி, பா.ஜ., உள்ளிட்ட பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக. இந்து விரோத சக்திகளை எதிர்த்து போராடுவோம் என்று கோஷங்கள் எழுப்பினர்.பாத விநாயகர் கோவிலில் இருந்து சிறுமுகை அருகே பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. அன்னூர் போலீசார், சிறப்பு காவல் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெரிய நாயக்கன்பாளையம்
கோவை வடக்கு துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, எஸ்.எஸ். குளம், சின்ன தடாகம் வட்டாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.ஒவ்வொரு சிலையும், போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளக்கிணறு குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. வெள்ளக்கிணறு குளத்தில் கழிவு நீர் தேங்கி நின்றதால், சிலைகளை கரைக்க ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த பெரிய குழி பாலிதீன் சீட்டால் மூடப்பட்டு, தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள், குளத்தில் பத்திரமாக இறக்கப்பட்டு கரைக்கப்பட்டன.குளத்துக்குள், விநாயகர் சிலைகளை பத்திரமாக கொண்டு வர சிறப்பு ஏற்பாடுகளை துடியலூர் போலீசார் செய்து இருந்தனர். குளத்தைச் சுற்றியும் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. குளத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க நீச்சல் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.