வெள்ளை ஈக்களால் தென்னையில் மகசூல் பாதிப்பு; கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
ஆனைமலை; தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.ஆனைமலையில், தென்னை சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான இரு நாள் கருத்தரங்கம் நடந்தது. நிறைவு நாளில், விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் பேசியதாவது:ஆனைமலை தாலுகாவில், 23 ஆயிரம் ெஹக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நிலவும் காலநிலை மாற்றச்சூழலில், பல்வேறு விதமான பூச்சிகளின் தாக்குதலால், உற்பத்தி திறன் குறைந்து மகசூல் பாதிப்படைந்துள்ளது.தென்னையில்,சிவப்பு கூண்வண்டு, காண்டாமிருக வண்டு, கருத்தலைப்புழு, ஈரியோபைட், சிலந்தி பூச்சி, வெள்ளை ஈ போன்றவை சேதத்தை ஏற்படுத்துகிறது. இவற்றில் தற்போது மகசூலை மிக அதிகளவு பாதிக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.இந்த ஈக்களின் தாக்குதலானது, இலைகளின் உட்பகுதியில் சுருள், சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் இடுகிறது. இவற்றின் மீது மெழுகு போன்ற வெள்ளை படலம் இருக்கும். இவற்றில், இளங்குஞ்சுகள், முதிர்ந்த ஈக்களால், ஓலையின் பச்சையம் பாதிப்பதால் வளர்ச்சி தடைபட்டு மகசூல் பாதிக்கின்றது. தென்னை ரகங்களில், ஒட்டு ரகங்களை குட்டை, நெட்டை, நெட்டை X குட்டை மற்றும் குட்டையில் அதிகளவு பாதிக்கப்படுகின்றது.இந்த ஈக்களை கட்டுப்படுத்த தென்னந்தோப்புகளில் விசைத் தெளிப்பான் வாயிலாக தண்ணீரை வேகமாக பீய்ச்சியடித்தும், மஞ்சள் நிற ஒட்டுப்பொறி ஏக்கருக்கு, 10 வீதம் மரங்களில் கட்டியும்; விளக்குப்பொறி ஏக்கருக்கு, இரண்டு வீதமும் பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வரலாம்.மேலும், பாதித்த தென்னந்தோப்புகளில் என்கார்சியா என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி இறக்கை இறை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 300 வீதம் வைத்து கட்டுப்படுத்தலாம்.சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலால் ஏற்படும் கரும்பூஞ்சானத்தை மைதா மாவு பசை கரைசலை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.விவசாயிகள் தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள ஆனைமலை தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.தென்னையில் வாடல் மற்றும் பலன் தராத மரங்களை அகற்றி புதிய மரங்கள் நடுவதற்கு தென்னை வளர்ச்சி வாரிய திட்டம் செயல்படுத்தப்படுவதால், விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.