உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சியில் 103 தீர்மானங்கள் ஆல் - பாஸ்

மாநகராட்சியில் 103 தீர்மானங்கள் ஆல் - பாஸ்

கோவை, ; கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், விவாதத்துக்கு வாய்ப்பு அளிக்காமல், 103 தீர்மானங்கள் 'ஆல்-பாஸ்' முறையில் நிறைவேற்றப்பட்டன. கோவை மாநகராட்சியில் மாமன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது; மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். இரு நாட்களுக்கு முன், தீர்மானங்கள் குறிப்புகள், கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. விவாதத்துக்கு வாய்ப்பு அளிக்காமல், 'ஆல்-பாஸ்' முறையில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் இடையே வழக்கமாக வழங்கப்படும் டீ, ஸ்னாக்ஸ் சாப்பிடக்கூட இடைவெளி அளிக்காமல், படபடவென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகே, அனைவரும் டீ, ஸ்னாக்ஸ் சாப்பிட முடிந்தது.அதில், 101 மற்றும், 102வது தீர்மானங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என, அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் கோரினார். அவரது கோரிக்கையை யாரும் பொருட்படுத்தவில்லை. மன்ற கூட்டம் முடிந்ததாக, மேயர் அறிவித்தார். 45 நிமிடமே கூட்டம் நடந்ததால், கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவாதமின்றி நிறைவேற்றிய தீர்மானங்களில் மிக முக்கியமானது, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கான மாதாந்திர கட்டணம் மற்றும் வைப்புத்தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தீர்மானங்களை, பெரும்பாலான கவுன்சிலர்கள், வீட்டுக்குச் சென்ற பிறகே படித்துப்பார்த்து, அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த மார்ச் மாதம் மாமன்ற கூட்டமும், பட்ஜெட் கூட்டமும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடத்தப்பட்டது. அதற்காக, மாமன்ற கூட்டம் ஒரு மணி நேரத்தில் முடிக்கப்பட்டது; வார்டு பிரச்னைகளை பேச, கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. உள்ளாட்சி இடைத்தேர்தல் தேதி அறிவிக்க இருப்பதால், அவசர கூட்டம் நடத்தப்பட்டதாக, மன்றத்தில் மேயர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !