152 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி; இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கோவை : கோவை, சுங்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரது, மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அருண்குமார், அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்த எண்ணில் பேசினார். மறுமுனையில் பேசிய நபர், எங்களிடம் பணம் கொடுத்தால் ஆன்லைன் டிரேடிங் செய்து, அதிக லாபம் தருவதாக கூறினார்.இதை நம்பிய அருண்குமார், ரூ.34 லட்சத்தை அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். இதன் பின்னர், அருண்குமார் லாப பணத்தை கேட்டபோது, அந்த நபர் ஏமாற்றியுள்ளார். அருண்குமார் புகாரின்படி, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.அருண் குமார் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள், செல்போன் எண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போலீசார், துடியலுாரை சேர்ந்த தனசேகரன், 29 மற்றும் ஆந்திராவை சேர்ந்த ரவிசந்துரு, 58 ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, நுாற்றுக்கணக்கான காசோலைகள், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம்., கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் சேர்ந்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 152 பேரிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தருக்கு பரிந்துரை செய்தார். இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, கமிஷனர் உத்தரவிட்டார்.