உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 211 பேர் பெற்று வந்த மகளிர் உரிமைத்தொகை திடீர் நிறுத்தம்; கோவை சமூகநலத்துறை நடவடிக்கை

211 பேர் பெற்று வந்த மகளிர் உரிமைத்தொகை திடீர் நிறுத்தம்; கோவை சமூகநலத்துறை நடவடிக்கை

கோவை; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியில்லாத, 211 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுவதை கண்டறிந்த கோவை மாவட்ட நிர்வாகம், உடனடியாக அவர்களுக்கு உரிமைத்தொகையை நிறுத்தியுள்ளது.தமிழகத்திலுள்ள தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் தோறும் மகளிர் உரிமைத் தொகையாக, 1,000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.கோவையில் ஏராளமானோர் விதிமுறைகளுக்கு புறம்பாக, மகளிர் உரிமைத்தொகை பெறுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, மாவட்ட சமூகநலத்துறை மற்றும் சமூகப்பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் தலைமையில், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில், கள ஆய்வு மேற்கொண்டனர்.அதில், 211 பேர் தகுதியின்றி, மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை பெறுவது தெரியவந்தது. இதையடுத்து, 211 பேர் பெற்று வந்த மாதாந்திர உரிமைத் தொகை நிறுத்தப்படுவதாக, அதிகாரிகள் அறிவித்தனர்.இது குறித்து, சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் சுரேஷ் கூறுகையில், '' எங்களுக்கு மாதந்தோறும் அறிக்கை வரும். அதன் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்வோம். அதன் பின்பே, மகளிர் உரிமைத்தொகையை வங்கிக்கு அனுப்பி வைப்போம். கோவை மாவட்டத்தில், 4,61,944 பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ