கோவையில் இருந்து 4 மாவட்டங்களுக்கு 48 டன் நெல் விதைகள் வினியோகம்
கோவை: சம்பா பருவ நடவுக்கு, துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் இருந்து, புதுக்கோட்டை, விழுப்புரம் உட்பட நான்கு மாவட்டங்களுக்கு, 48 டன் நெல் விதைகள் அனுப்பப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில், துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் - டியூகாஸ், விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இங்கிருந்து, ஆண்டுதோறும், சம்பா பருவ நடவு மற்றும் குறுவை பருவ நடவுக்கு என, தேவைக்கு ஏற்ப, நெல் பயிரிடப்படும் மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர்.ஆக., முதல் அக்., வரை, சம்பா பருவத்துக்கு விதைக்க, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், கரூர், குளித்தலை, ஈரோடு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், 'டியூகாஸ்' பிரநிதிகள் வாயிலாக பட்டியல் வாங்கப்பட்டு, அம் மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு, அனுப்பி வைக்கப்படுகின்றன.இதன்படி, புதுக்கோட்டைக்கு 5 டன், விழுப்புரத்துக்கு 18.60 டன், நாமக்கலுக்கு 11.50 டன், திருவண்ணாமலைக்கு 13 டன் என, 48 டன் நெல் விதைகள் மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இருந்து, 43 டன் விதைகள் தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது. தவிர, கோவை துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில், 156 டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.