உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆண்டுக்கு 600 யானைகள் கொல்லப்படுகின்றன

ஆண்டுக்கு 600 யானைகள் கொல்லப்படுகின்றன

கோவை: ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முரண் பாடுகள் மேலாண்மை மையம் (ஏ.இ.சி.ஆர்.சி.எம்.சி.,) சார்பில், உலக யானைகள் தின கொண்டாட்டம், கோவை, தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் நேற்று நடந்தது. மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். உதவி வனப்பாதுகாவலர் அகெல்லா சைதன்யா மாதவுடு துவக்கி வைத்தார். ஏ.இ.சி.ஆர்.சி.எம்.சி., விஞ்ஞானி நவீன், ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் முதன்முறையாக துவக்கப்பட்டதன் நோக்கம், மூன்றாண்டுகளில் இதன் செயல்பாடு குறித்து விவரித்தார். அவர் பேசுகையில், “மேற்குவங்கத்தில் யானை - மனித முரண்பாடுகள் அதிகம் நடக்கின்றன. தற்போது யானைகள், வாழ்விடம் அல்லாத பகுதிகளுக்கும் வலசை செல்கின்றன. தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்கிறோம். தீர்வை நோக்கி நகர, இத்தரவு உதவியாக இருக்கும்,” என்றார். கொங்குநாடு கல்லுாரி வனஉயிர் உயிரியல் துறைத் தலைவர் சிவசுப்பிரமணியன் பேசுகையில், ''உயிரிழந்த 1,547 யானைகளின் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஒரே ஒரு யானை 60 வயதைக் கடந்திருந்தது. 75 சதவீத யானைகள் 25 வயதுக்குள் இறந்திருந்தன. இவற்றில் பெரும்பாலானவை துப்பாக்கியால் சுடப்பட்டும், தந்தத்துக்காக வேட்டையாடப்பட்டும், மின்சாரம் பாய்ச்சியும் கொல்லப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 600 யானைகள் மனிதர்களால் உயிரிழக்கின்றன. யானைகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு ஆண்டுக்கு 500. மனித - யானை முரண்பாடு தென்மாநிலங்களில் அதிகம். யானைகளைப் பாதுகாப்பதன் வாயிலாக வனத்தையும், பிற வன உயிரினங்களையும் பாதுகாக்கலாம்,'' என்றார். சிறப்பாக செயல்பட்ட வனத்துறையினருக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார், வனத்துறை கால்நடை மருத்துவர் வெண்ணிலா, பெ.நா.பாளையம் வனச்சரகர் சரவணன், ஜி.ஐ.எஸ்., பகுப்பாய்வாளர் பீட்டர் பிரேம் சக்ரவர்த்தி உட்பட வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ