காதல் திருமணம் செய்தவரை கடத்த முயன்ற 7 பேர் கைது
சூலுார்; தேனி மாவட்டம், ஓடபட்டியை சேர்ந்தவர் சரண்யா, 22, நர்சிங் கல்லுாரியில் படித்தபோது, வேறு சமூகத்தைச் சேர்ந்த டிரைவரான விக்னேஷ் என்பவரை காதலித்தார். வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜூலை மாதம், இருவரும் திருமணம் செய்துகொண்டு, சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன் புதுாரில் வாடகை வீட்டில் தங்கி, வேலைக்குச் சென்று வந்தனர். இரு நாட்களுக்கு முன் மாலை, சரண்யாவின் தந்தை ஆனந்தன், 50, தாய் லதா, 36, மாமா ஈஸ்வரன், 37, அத்தை மகேஸ்வரி, 27, பிரகாஷ், 31 மற்றும் அவரது நண்பர்கள் விஜய், 27, அதிபன், 30 ஆகியோர் காரில் முத்துக்கவுண்டன் புதுார் வந்தனர். சரண்யா தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று, தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். அவர் மறுத்து, வீட்டுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார். ஆத்திரமடைந்த உறவினர்கள், கொலை மிரட்டல் விடுத்து, கதவை உடைத்து, கடத்த முயன்றனர். அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார், ஏழு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். சரண்யா அளித்த புகாரின் பேரில், அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.