மாநில தேர்வுக்கான பயிற்சி; 86 மாணவர்கள் பங்கேற்பு
கோவை; தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்காக, கோவை நகர வள ஒன்றியம் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான ஒளிமியாண்டு தேர்வுகளில் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர். அதேபோல், தமிழ் மொழி மற்றும் இலக்கிய திறனையும் மேம்படுத்தும் நோக்கில், தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மாணவர்களுக்கு மாவட்டம் தழுவிய பயிற்சிகள், 15 வட்டார வள மையங்களில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை நகர வள ஒன்றியத்திற்கு உட்பட்ட, துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 13 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, பிளஸ் 1 படிக்கும் 86 மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியாளர் கூறுகையில், 'இந்த தேர்வானது, பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் நடத்தப்படும். தேர்வில் மாநிலம் முழுவதும் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.தேர்ச்சி பெறும் மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதம் ரூ.1,500 வீதம் இரு ஆண்டுகள் உதவித் தொகை பெறுவார்கள். இதில், 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் தனியார் பள்ளி மாணவர்களும் இடம்பெறுவர்' என்றார்.