தேயிலை செடிக்குள் பதுங்கியது கரடி
வால்பாறை; தேயிலை செடிக்குள் பதுங்கிய கரடியை கண்டு, எஸ்டேட் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில், கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.நேற்று முன் தினம் இந்த எஸ்டேட்டில், தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேயிலைச்செடிக்கு அடியில் கரடி ஒன்று பகுங்கியிருப்பதை கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இந்த சம்பவத்தில் சாந்தி, 44, என்ற பெண் தொழிலாளி, கரடியை கண்டு பயந்து ஓடிய நிலையில் வலது காலில் காயம் ஏற்பட்டு, எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், கரடி தேயிலை தோட்டத்தில் உலா வருவதால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.