உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு வழிச்சாலையை கடக்க பாலம் தேவை; பணியை தடுத்து மக்கள் போராட்டம்

நான்கு வழிச்சாலையை கடக்க பாலம் தேவை; பணியை தடுத்து மக்கள் போராட்டம்

பொள்ளாச்சி; பெரியகவுண்டனுார் அடுத்த தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் கட்டித் தர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை - திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிராமங்களை இணைக்கும் வகையில் சர்வீஸ் ரோடு அமைத்தும், தேவையான இடங்களில் பாலம் அமைத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பெரியகவுண்டனுார் அருகே நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் கட்டித் தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பணிகளை தடுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.மக்கள் கூறியதாவது:பெரியகவுண்டனுார் வடக்கு பகுதியில் அதிகப்படியான பரப்பில் விளைநிலங்கள் உள்ளன. விவசாயிகள் பலர், பணியாளர்களைக் கொண்டு, விவசாயம், கோழிப்பண்ணை, பால்பண்ணை அமைத்து தொழில் செய்து வருகின்றனர்.மக்கள், வடக்கு நோக்கி செல்லும் தார் ரோட்டை பயன்படுத்தி வந்தனர். தற்போது, அந்த ரோட்டின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. அந்த சாலை மிகவும் தாழ்வாக அமைக்கப்படுகிறது.இது குறித்து, துறை ரீதியான அதிகாரிகளிடம் முறையிட்டபோது, பாலம் கட்டி தருவதாக உறுதியளித்தனர். தற்போது, பாலம் கட்ட அனுமதியில்லை என, அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். இங்கு, பாலம் கட்டித் தர வேண்டும். இல்லையெனில், சுற்றுப்பகுதி கிராம மக்கள் பாதிப்படைவர்.பாலம் கட்ட திட்ட இயக்குனருக்கு அனுமதி கோரி மனு அளித்து பதில் கிடைக்கும் வரை, ஒப்பந்ததாரர்கள் பணியை தொடர மாட்டோம் என்று தெரிவித்ததால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ