வரகளியார் முகாமில் வளர்ப்பு யானை உயிரிழப்பு
பொள்ளாச்சி; ஆனைமலை புலிகள் காப்பகம், வரகளியார் முகாமில் வளர்ப்பு யானை வெங்கடேஷ், உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தது. பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் மற்றும் வரகளியார் முகாமில், 24 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரகளியார் முகாமில் உள்ள 38 வயது வெங்கடேஷ் எனும் ஆண் யானையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, துணை இயக்குனர் தேவேந்திரகுமார்மீனா தலைமையில் ரேஞ்சர் வெங்கடேஷ் முன்னிலையில் வனக்கால்நடை டாக்டர் வெனிலா, கால்நடை டாக்டர் ஜெயரவீனா, கவுதம் அடங்கிய குழுவினர், யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. வனத்துறையினர் கூறுகையில், 'உடல் நலம் பாதிக்கப்பட்டு யானை இறந்து விட்டது. பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.