சூரிய வாகனத்தில் மன்னீஸ்வரர் உலா தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
அன்னுார், ; அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், சூரிய வாகனத்தில், சுவாமி திருவீதியுலா நேற்று நடந்தது.ஆயிரம் ஆண்டுகள் பழமையான, அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், 25ம் ஆண்டு தேர்த் திருவிழா, கடந்த 3ம் தேதி கிராம சாந்தி மற்றும் தேவதை வழிபாடுடன் துவங்கியது.நேற்றுமுன்தினம் காலை 6:30 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் பங்கேற்றனர்.நேற்று காலை 7:30 மணிக்கு, சூரிய வாகனத்தில், அருந்தவச் செல்வி உடன்மர் மன்னீஸ்வரர், ஓதிமலை ரோடு, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, கடைவீதி வழியாக திருவீதியுலா வந்தார். காலை 10:00 மணிக்கு, மீண்டும் தேர் கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று இரவு 7:00 மணிக்கு, பூத வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு, வள்ளி முருகன் கலைக்குழுவின், வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது.நாளை (7ம் தேதி) இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில், செண்டை மேளம், நாதஸ்வரம், வாணவேடிக்கை மற்றும் ஜமாப்புடன் திருவீதி உலா நடக்கிறது. வரும், 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 10ம் தேதி தேரோட்டம் நடக்கின்றன.