முதல்வர் கோப்பை கிரிக்கெட்டில் கொஞ்சம் ஓவர்! போட்டி நடத்துவதில் விளையாட்டு
கோவை : முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அணிகள் அதிகரித்துள்ளதாக கூறி விதிமுறைகளை பின்பற்றாமல், 'ஓவர்'களை பாதியாக குறைத்து, கடமைக்கு போட்டிகள் நடத்துவதாக, வீரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள், கோவை மாவட்டத்தில் கடந்த, 10ம் தேதி முதல் நடந்து வருகின்றன. பள்ளி மாணவர்களை அடுத்து, கல்லுாரி மாணவர்களுக்கு நேற்று முதல், 20ம் தேதி வரை போட்டிகள் இடம்பெறுகின்றன.நேரு ஸ்டேடியம், பாரதியார் பல்கலை உட்பட பல்வேறு இடங்களில் தடகளம், கால் பந்து உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை பொருத்தவரை, 160 அணிகள் இணையதளத்தில் பதிவு செய்திருந்தன.சரவணம்பட்டி, சங்கரா கல்லுாரி மைதானத்தில் நேற்று முதல் வரும், 20ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி நடத்த, முதலில் இடம் அறிவிக்கப்பட்டது. ஆனால், 80 அணிகள் களத்துக்கு வந்ததால் அவசர முடிவாக வட்டமலைபாளையம், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மைதானம் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டது.பள்ளி மாணவர்களுக்கு, 10 ஓவர் வைத்து கிரிக்கெட் நடத்தப்பட்டது. ஆனால், நேற்று துவங்கிய கல்லுாரி மாணவர்களுக்கான போட்டியில், ஐந்து 'ஓவர்' ஆக குறைக்கப்பட்டது. நேரமின்மையை காரணமாக கூறி, இந்நடவடிக்கையை 'கமிட்டி' எடுத்துள்ளதாக, கிரிக்கெட் வீரர்கள் புலம்புகின்றனர்.விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தவும், அடுத்தகட்டத்துக்கு செல்லவும் இதுபோன்ற போட்டிகள் அரசால் நடத்தப்படுகின்றன. ஆனால், அவசரகதியில், கடமைக்கென்று நடத்தப்படும் போட்டிகளால், எந்த பலனும் இல்லை என்கின்றனர், உடற்கல்வி இயக்குனர்கள்.கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள் சிலர் கூறியதாவது:அணிகள் அதிகமாக இருப்பதால், 10ல் இருந்து, 5 ஆக ஓவரை குறைத்துள்ளனர். இதை பார்த்தால், 'ஸ்டிரீட் கிரிக்கெட்' போல் இருக்கிறது. கேட்டால், 'இஷ்டம் இருந்தால் விளையாடுங்கள்' என, போட்டி நடத்துவோர் மிரட்டுகின்றனர்.அவசர முடிவாக, ராமகிருஷ்ணா கல்லுாரிக்கு செல்லுமாறு கூறியதால், போக்குவரத்து வசதியும் இல்லாமல் அலைச்சல் ஏற்பட்டது. கூடுதலாக விளையாட்டு மைதானங்களை ஏற்கனவே தேர்வு செய்திருந்தால், எந்த பிரச்னையும் இருந்திருக்காது.இவ்வாறு, அவர்கள் கூறினர். அரையிறுதி முதல்!
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த் கூறுகையில், ''அணிகள் அதிகமாக இருந்ததால்தான், ஓவர் குறைக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் இருந்து, 10 ஓவர் வைத்து போட்டி நடத்தப்படும். கிரிக்கெட் பந்துகளும் புதிதாக வாங்கி கொடுத்துள்ளோம். பந்துகளை அணிகள் கொண்டுவர தேவையில்லை,'' என்றார்.
புதிய பந்துகள் எங்கே?
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், கிரிக்கெட் பந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், விளையாடும் அணிகள்தான் பந்துகளை வாங்கிவர வேண்டும் என, 'கமிட்டி' நபர்கள் சிலர் நிர்பந்திப்பதாக, வீரர்கள் குமுறுகின்றனர். அப்படியானால் ஒதுக்கப்பட்ட நிதியில் வாங்கிய பந்துகள் எங்கே என்பதுதான், வீரர்களின் கேள்வி.