உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பது கட்டாயம்: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பது கட்டாயம்: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கோவை: மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பது கட்டாயம் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். கிராமசபை கூட்டத்தில் சுதந்திர தின கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட, பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். வளர்ச்சிப்பணிகள் குறித்த மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்; தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். ஆனால் இதற்கு முன் திராவிட ஆட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் பெயரளவுக்கே நடந்ததாக கூறுகின்றனர் விவசாயிகள் சிலர். 'கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் பெரும்பாலும் பங்கேற்பதில்லை. கடந்த முறை சில இடங்களில் கிராம சபை கூட்டங்களே நடக்கவில்லை. நடந்ததாக அதிகாரிகள் பொய் தகவலை தெரிவித்தனர். இது குறித்து புகார்கள் எழுந்த பிறகே கூட்டம் நடைபெறாதது உயர் அதிகாரிகளுக்குத் தெரியவந்து, விளக்கம் கேட்கப்பட்டது. பங்கேற்காத அதிகாரிகள் மீது, இதுவரை துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை' என்றனர் அவர்கள். த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழா கிராமசபை கூட்டம் இது. இக்கூட்டங்களில் அதிகாரிகள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென, மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கோவை கலெக்டர் பவன்குமார் கூறுகையில், ''கிராமசபை கூட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டம் தொடர்பான உரிய நடைமுறையை பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை