உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பசுமை வழி சாலைக்கு பதில் புதிய பாதை அமைக்கலாம்; கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை

பசுமை வழி சாலைக்கு பதில் புதிய பாதை அமைக்கலாம்; கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை

அன்னுார்; 'பசுமை வழிச்சாலைக்கு மாற்றாக, ஓதிமலை வழியாக புதிய பாதை அமைக்கலாம்,' என, கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், 1,912 கோடி ரூபாயில், குரும்பபாளையம் முதல், கர்நாடக எல்லை வரை, பசுமை வழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த, உரிமையாளர்களுக்கு, 3ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான இரண்டாம் கட்ட விசாரணை, நேற்று அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில், 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் (நிலம் எடுப்பு) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது :அன்னுாரில் இருந்து ஓதிமலை, பவானிசாகர் வழியாக கர்நாடகா வரை பாதை அமைக்கலாம். இதனால் விவசாயிகள், பொதுமக்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுகுறையும். இல்லாவிட்டால் கோவையில் துவங்கி பண்ணாரி வரை, ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை 150 அடிக்கு அகலப்படுத்தலாம். அகலப்படுத்த முடியாத இடத்தில் மேம்பாலம் கட்டலாம். கோவில்பாளையம், அன்னுார் மற்றும் புளியம்பட்டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றலாம். 150 அடி அகலத்திற்கு பதில்60 அடி அகலத்தில் பசுமை வழிச் சாலை அமைக்கலாம். புதிய பசுமைவழிச் சாலையில் சுங்கச்சாவடி அமைக்க உள்ளதால் பல வாகனங்கள் அதை தவிர்த்து விட்டு ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவார்கள். ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைத்து இத்திட்டத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அபிராமி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் அரசுக்கு தெரிவிக்கப்படும், என்றார். அடுத்த கருத்து கேட்பு கூட்டம் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !