உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளில் நிதி முறைகேடுகள் பற்றி திடீர் ஆய்வு! உயர் அதிகாரிகள் தலைமையில் நடத்த முடிவு

அரசு பள்ளிகளில் நிதி முறைகேடுகள் பற்றி திடீர் ஆய்வு! உயர் அதிகாரிகள் தலைமையில் நடத்த முடிவு

பெ.நா.பாளையம் : கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை முடிவு செய்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு, கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பள்ளி நிர்வாகம் வருகை பதிவேட்டை திருத்தம் செய்து, 230 மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளியில், 550 மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டியது. இதற்காக கூடுதல் ஆசிரியர்களை பெற்று, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பியதும் திடீர் ஆய்வில் தெரிய வந்தது. இது மட்டுமல்லாமல், 320 மாணவர்கள் பெயரில் பள்ளி கல்வித்துறையின் பல்வேறு விலை இல்லாத திட்டங்களையும், சத்துணவு பொருட்களையும் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது என, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மோசடி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து இருப்பதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்த தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்புடைய நபர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கல்வித்துறை உத்தரவு

இச்சம்பவத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் நடுநிலைப் பள்ளிகள், துவக்க பள்ளிகளில் விரிவான விசாரணை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களின் வருகை பதிவேட்டையும், அன்றாடம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகையையும், நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது வருகை பதிவேட்டில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும், நேரில் ஆஜரான மாணவர்களின் எண்ணிக்கையும் ஆய்வு செய்து, அதிக மாணவர்கள் ஆஜராகாத நிலையில் குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இது தவிர, பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட, கழிப்படம் கட்ட, பள்ளிகளில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ள சி.எஸ்.ஆர்., நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை, அதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறதா, அதன் விபரங்கள், அரசு வழங்கிய பராமரிப்பு நிதி எவ்வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதற்கான ரசீதுகள், பணிகள் மேற்கொள்ளப்பட்ட விபரங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஓரிரு நாளில்...

கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தால், அவர்களுக்கு வழங்கிய சம்பளம், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக வழங்கப்பட்ட சீருடைகள், காலணிகள், புத்தகங்கள் உள்ளிட்டவை வருகை பதிவேட்டில் உள்ள குழந்தைகளுக்கு சென்று சேர்ந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஓரிரு நாளில் சென்னையில் இருந்து வரும் உயர் அதிகாரிகள் தலைமையில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாணவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஆசிரியர்கள்...

கடந்த ஏப்., மே மாதங்களில் அரசு பள்ளிகளில் சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக அரசு சார்பில், பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று, தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பல இடங்களில் பள்ளி படிப்பை தொடர முடியாத மாணவர்கள், இடை நின்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பள்ளிப்படிப்பை தொடர முடியாதவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். அவர்களின் பெயர்கள், வருகை பதிவேட்டில் உள்ளன. இதில், சிலர் பள்ளி வகுப்புகள் துவங்கியவுடன், ஒரு சில நாட்களே வந்தனர். பலர் பள்ளிக்கு வருவதில்லை. இந்நிலையில், திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வி அதிகாரிகள், அரசு பள்ளிகளுக்கு வர இருப்பதால், ஆசிரியர்கள், பள்ளியின் வருகை பதிவேட்டில் பெயர் இருந்தும், பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களை தேடி கண்டுபிடித்து, பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

குப்புபாகவதர்
செப் 19, 2024 16:13

அது ஒண்ணுமில்லை. ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே சில திராவிடாள் சென்னை கார்ப்பரேஷன்லே மேயரா இருந்துண்டு இல்லாத ஆள்களை வேலைக்கு வெச்சதா பேர் எழுதி பொய்க்கணக்கு காட்டி பிரபலமா மஸ்டர் ஊழல்னு செஞ்சு பேரெடுத்தாள். அதே மாடலை இப்போ மேலும் பல திருட்டு திராவிடாள் பள்ளிக்கூடம் வரை கொண்டு சென்று ஆட்டையை போட்றாள். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் வரை கட்டிங் போகாம நடக்காதுன்னு சொல்றாள். கலியுகத்தில் இவாதான் ராஜா. இவாளே மந்திரி. இவாளே அதிகாரி. இதை ஒழிக்க யார் அவதாரம் எடுத்து வருவாளோன்னு தெரியலை. சுபம்.


அப்பாவி
செப் 19, 2024 16:06

சஸ்பெண்ட் எதுக்கு பண்றீங்க? செஞ்ச குத்தத்துக்கு டிஸ்மிஸ் பண்ணி ஜெயில்ல போட வாணாமா?


sundaran manogaran
செப் 19, 2024 13:31

கல்வியில் முதல் மாநிலமாக இருப்பது எப்படி என்று இப்போது புரிகிறதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை