கோவை: உடல்நலம் பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் தங்கையின் கல்லுாரி படிப்புக்காக, மெத்தபெட்டமைன் விற்பனை செய்த வாலிபரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.கரும்புக்கடை, சாரமேடு பகுதியை சேர்ந்த சையது அகமது மகன் இஜாஸ் அகமது, 24. பெற்றோர் மருத்துவ செலவு, தங்கையின் படிப்பு செலவை சமாளிக்க, இஜாஸ் அகமது போதுமான வருமானம் இல்லாமல் திணறி வந்துள்ளார். இந்நிலையில், உறவினர் ஒருவர், இஜாஸ் அகமதுவிற்கு மெத்தபெட்டமைன் குறித்து கூறினார். பெங்களூருவை சேர்ந்த இம்ரான் என்பரையும், அறிமுகம் செய்து வைத்துள்ளார்.பெங்களூருவில் இருந்து குறைந்த விலைக்கு, மெத்தபெட்டமைன் வாங்கி, இங்குள்ள இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய, இஜாஸ் அகமது திட்டமிட்டார். இதற்கு தனது, நண்பரான குறிச்சி பிரிவு பகுதியை சேர்ந்த, 18 வயதான யாசர் அராபத்தை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டார்.இருவரும் பெங்களூருவில் இருந்து, மெத்தபெட்டமைன் வாங்கி, இங்கு கிராம் கணக்கில் விற்பனை செய்தனர். ஒரு கிராமுக்கு சுமார் ரூ. 500 முதல் ரூ. 1000 வரை லாபம் கிடைத்துள்ளது. இருவரும் சமமாக பிரித்துக்கொண்டனர்.கடந்த சில மாதங்களாக இவ்வாறு செய்து வந்தனர். இந்நிலையில், உக்கடம் பேரூர் பைபாஸ் சாலையில் நின்றிருந்தபோது, ரகசிய தகவலின் பேரில் விரைந்து சென்ற பெரியகடை வீதி போலீசார், இருவரையும் பிடித்து சோதனையிட்டனர்.இஜாஸ் அகமதுவிடம் இருந்த சிறு கவரில், மெத்தபெட்டமைன், '10 ஜிப் லாக் கவர்' உள்ளிட்டவையும், யாசர் அராபத்தின் ஸ்கூட்டரில் மெத்தப்பெட்டமைன், 5 ஜிப் லாக் கவர் உள்ளிட்டவையும் இருந்துள்ளது. மொத்தம் நான்கு கிராம் மெத்தபெட்டமைன், ஜிப் லாக் கவர், இரு சக்கர வாகனங்கள், மொபைல் போன் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.