பஸ் ஸ்டாண்டுகளில் அவலங்கள் ஆயிரம்
கோவையில், பஸ் போக்குவரத்தையே பெரும்பாலான மக்கள் நம்பியுள்ளனர். பஸ்கள், பஸ் ஸ்டாண்டுகள் பராமரிப்பின்மை, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, பயணிகளை சிரமத்தில் ஆழ்த்துகிறது.n உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழநி, பாலக்காடு பகுதிகளுக்கு அதிக பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கு மேம்பால பணிகளுக்காக பல்வேறு கட்டமைப்புகள் இடிக்கப்பட்டன. மினி பஸ்கள் நிற்கும் இடத்தில், நிழற்கூரை இல்லை; இதனால் நேற்று பெய்த மழைக்கு, பயணிகள் நனைந்தபடி காத்திருந்தனர். பாலக்காடு செல்லும் 'ரேக்' ஒட்டி, சிறுநீர் கழிப்பதும் சுகாதார சீர்கேட்டுக்கு காரணமாக உள்ளது. பயணிகளுக்கு போதிய இருக்கைகள் இல்லை. பிளாட்பார்ம்கள் மோசமான நிலையில் உள்ளன. குடிநீர் வசதியும் இல்லாததால், பயணிகள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை.n சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் திருச்சி, மதுரை, சிவகாசி, தேனி போன்ற ஊர்களுக்கு செல்லும் 'ரேக்'களில் குடிமகன்கள் 'மட்டையாகி' கிடப்பது சர்வசாதாரணம். அங்குள்ள மொபைல் டாய்லெட், பயன்பாடற்று கிடக்கிறது.n காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டாண்ட், டவுன் பஸ் ஸ்டாண்டுகளில் ஆக்கிரமிப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அங்கு கடை நடத்துபவர்கள், பயணிகள் காத்திருக்கும் இடங்களில் பொருட்களை வைத்து ஆக்கிரமிக்கின்றனர்.n எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்கப்படும் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டில், பிளாஸ்டிக் இருக்கைகள் புதிதாக மாற்றியே ஐந்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். கேரள பஸ்கள் நிறுத்தப்படும், பக்கவாட்டு பகுதி சிறுநீர் கழிப்பிடமாகவும், இரவு நேரங்களில் 'குடி'மகன்களின் கூடாரமாகவும் மாறிவிடுகிறது.n மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் நுழைவில், சுகாதார மற்ற சூழல் நிலவுகிறது. உள்ளே நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்கின்றனர். இரும்பு இருக்கைகள் பல மோசமான நிலையில் உள்ளன. நெரிசலை தவிர்க்கும் விதமாக, நகரின் வெளிப்பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது. கோவை நகரை அடையாமலே, டவுன் பஸ், வெளியூர் பஸ்கள் என, அனைத்து வகை பஸ்களும் வந்து செல்லும், ஒருங்கிணைந்த 'பஸ் டெர்மினல்' அமைப்பது காலத்தின் கட்டாயம்!