காதலனை கரம்பிடிக்க பறந்து வந்த இளம்பெண்
கோவை: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தார். இந்நிலையில் உயர்கல்வி படிக்க அந்த பெண் லண்டன் சென்றார். எனினும் காதல் நீடித்ததால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். லண்டனில் படித்துக் கொண்டிருந்த காதலி விமானத்தில் கொச்சி வந்தார். அங்கிருந்து காதலனின் உறவினர்கள் காரில் கோவைக்கு அழைத்து வந்தனர். இருவரும் உக்கடத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தகவல் அறிந்த பெண் வீட்டினர் இருவரையும் பிரித்து அழைத்து செல்ல முயன்றனர். இருவரும் பாதுகாப்பு கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்றனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். இரவு நேரமாகி விட்டதால், திருமணத்தை பதிவு செய்ய இயலாது என, பத்திரப்பதிவு அலுவலர்கள் கூறினர். பெண் வீட்டாரை அழைத்து பேசிய போலீசார், 'இருவரும் சட்டபடி மேஜர் என்பதால், தொந்தரவு செய்யக்கூடாது' எனக்கூறி திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தனர். காதலனை கரம்பிடிக்க இளம்பெண் லண்டனில் இருந்து கோவை வந்து திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.