இயல்பு நிலைக்கு திரும்பியது ஆவின் பால் வினியோகம்
கோவை: ஆவின் நிர்வாகம் முகவர்களுக்கான கமிஷன் வழங்கும் நடைமுறையில் புதிய மாற்றத்தை செயல்படுத்தியதற்கு முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் பால் வினியோகத்திற்கான தேவைப்பட்டியலை செயலியில் பதிவிடாமல் புறக்கணித்தனர். ஆவின் நிர்வாகம் முகவர்களுடன் இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் எதிரொலியாக நேற்று 2.15 லட்சம் லிட்டர் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது. வழக்கமாக வினியோகிக்கப்படும் அளவுக்கு பதிலாக, 40 ஆயிரம் லிட்டர் வரை மட்டுமே பால் வினியோகிக்கப்பட்டது. இதனால், ஆவின் பால் அட்டைதாரர்கள் உள்ளிட்ட நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முகவர்களின் கோரிக்கையை ஏற்று, பழைய கமிஷன் நடைமுறையை மீண்டும் செயலியில் அமல்படுத்த ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முகவர்கள் நேற்று வழக்கம்போல் பால் தேவைப்பட்டியலை பதிவு செய்தனர். இதனால், மாவட்டம் முழுவதும் ஆவின் பால் வினியோகம் மீண்டும் சீரானது.