புதரில் மறைந்த மின் கம்பங்கள் பராமரிக்க நடவடிக்கை தேவை
வால்பாறை : வால்பாறை நகரில் புதர் சூழ்ந்து காணப்படும் மின் கம்பத்தை சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு தேவையான மின்சாரம், அய்யர்பாடி துணை மின் நிலையத்தின் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள பெரும்பாலான எஸ்டேட்களில், உயர் மின் அழுத்த மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில், கொடி வகை தாவரங்கள் படர்ந்துள்ளது. இதனால், மின்கம்பங்கள் புதரில் மறைந்து கிடக்கிறது.பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில், எஸ்டேட் பகுதியில் உள்ள ரோடுகள் மிகவும் குறுகலாக உள்ளது. ரோட்டோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிலாளர் குடியிருப்பு பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் மின் அழுத்த மின் கம்பம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் சூழ்ந்தும், கொடிகள் படர்ந்தும் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் புதர்சூழ்ந்து காணப்படும் மின் கம்பத்தையும் சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும்,' என்றனர்.