உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தால் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை

குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தால் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்; பொது இடங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேட்டுப்பாளையம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டம் காரமடை மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள், கடைகள், குடியிருப்பு பகுதிகள், சிக்னல்கள் என பொது இடங்களில் பெண்கள் கும்பலாக கைக்குழந்தைகளை தோளில் தூக்கிக்கொண்டு வந்து பிச்சை கேட்பது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த குழந்தைகள், பெரும்பாலும் அழுவது கிடையாது, கடும் வெயிலில் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர்.இப்பெண்கள் யார், இவர்கள் கொண்டுவரும் குழந்தைகள் இவர்களது தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல் 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பலூன் விற்பனை செய்ய வைக்கின்றனர். இந்த கும்பல் ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தில் வந்து, குழந்தைகளை வைத்து வியாபாரம் மற்றும் பிச்சை எடுத்துவிட்டு கிளம்பி சென்றுவிடுகின்றனர்.இதுகுறித்து, மேட்டுப் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறுகையில், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது, குழந்தை தொழிலாளர் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை வைத்து பலூன் விற்பனை உள்ளிட்ட வியாபாரத்தில் ஈடுபடுத்துவது போன்றவைகள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு கல்வி கிடைக்க, போலீசாரின் முயற்சியில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பெற்றோருக்கு விழிப்புணர்வு வழங்கப்படும், என்றார்.இதுகுறித்து, குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 'குழந்தைகள் குறித்து சந்தேகம் இருப்பின், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 என்ற கட்டணம் இல்லா எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிக்கலாம். குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர்களும் கண்காணிக்கின்றனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kundalakesi
ஜூன் 05, 2025 22:50

கற்பகம் கல்லூரி சந்திப்பில் தான் இந்த கண்றாவியை பார்க்க முடியும். சைல்ட் லைன் ஒரு வேஸ்ட் லைன்.


A P
ஜூன் 05, 2025 09:33

சில வருடங்களுக்கு முன் செய்திகளில் படித்திருக்கிறேன். பச்சிளம் குழந்தைகளை கடத்திக்கொண்டு வந்து, அதற்கு சிறிது உணவும் மயக்க மருந்தும் கொடுத்து தூங்கவைத்த பின்னர், தோளில் வைத்துக்கொண்டு, ஏதும் அறியாதவாறு பிச்சை எடுக்கிறார்கள் என்று. இதற்க்கு அரசியல் பலம் வாய்ந்த புரோக்கர்கள் சில பேர் உள்ளனர் என்றும் படித்த ஞாபகம். கொடுங்கோலர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை