ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்த கூடுதல் இட வசதி
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், வாகனங்கள் நிறுத்த, அதிகாரிகள் கூடுதல் இடவசதிகளை செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் மற்றும் விரிவாக்கம் பணிகள், 23 கோடி ரூபாய் செலவில் நடைபெறுகின்றன. புதிய ரயில் பாதைகள், பிளாட்பாரங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பயணிகள் டிக்கெட் கவுண்டருக்கு செல்லும் நடைபாதை ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் பயணிகள் வரும் வாகனங்கள், ஏற்றிச் செல்ல வரும் வாகனங்கள், நிறுத்த போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காலையில் நீலகிரி எக்ஸ்பிரஸ் வரும்பொழுது, வாகனங்கள் நிறுத்த இடமில்லாததால், நீண்ட தொலைவில் நிறுத்துகின்றனர். பயணிகள் லக்கேஜ்களை, வாகனங்கள் நிற்கும் இடத்திற்கு தூக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால், அவதிப்படுகின்றனர். இதை அறிந்த ரயில்வே அதிகாரிகள், நடைபாதையின் அருகே காலியாக உள்ள இடத்தில், வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக நடைபாதையில், இரண்டு இடங்களை உடைத்து, அதில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.