உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவுண்டம்பாளையம் தொகுதியில் கூடுதல் ஓட்டுச்சாவடிகள்; வருவாய் துறையினர் ஆய்வு

கவுண்டம்பாளையம் தொகுதியில் கூடுதல் ஓட்டுச்சாவடிகள்; வருவாய் துறையினர் ஆய்வு

பெ.நா.பாளையம்; வாக்காளர் வசதிக்காக, கவுண்டம்பாளையம் தொகுதியில் கூடுதல் ஓட்டு சாவடிகள் அமைக்க, வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்ட அளவில், 31 லட்சத்து, 88 ஆயிரத்து, 594 வாக்காளர்கள் உள்ளனர். வரும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி ஓட்டு சாவடிகளை சீரமைக்க, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வருவாய் துறையின் தேர்தல் பிரிவு அதிகாரிகள் அதிகபட்சம், 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டு சாவடிகளை பிரித்து, கூடுதலாக ஓட்டு சாவடிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 3,117 ஓட்டு சாவடிகள் உள்ளன. இதில், 897 ஓட்டு சாவடிகளில், 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வாக்காளர்கள் அதிகம் உள்ள ஓட்டுச் சாவடிகளை இரண்டாக பிரிப்பது, பக்கத்தில் உள்ள ஓட்டு சாவடிகளுடன் குறிப்பிட்ட சில வாக்காளர்கள் அதில் இணைப்பது போன்ற பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதமாக ஓட்டு சாவடிகளை பிரிப்பது, வாக்காளர்களை வேறு ஓட்டு சாவடிக்கு மாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. கவுண்டம்பாளையம் தொகுதியில், 70 ஓட்டு சாவடிகளில், 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் பிரிவினர் கூறுகையில்,' பிரிக்கப்பட்ட புதிய ஓட்டு சாவடி அமைக்கப்படும் இடம், வாக்காளர் பட்டியல் போன்ற விபரங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியிடப்படும். இரண்டு ஓட்டு சாவடிகளுக்கும் இடைவெளி, 2 கி.மீ., மேல் இருந்தால், அப்பகுதியில் புதிய ஓட்டு சாவடி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பஸ் வசதி இல்லாத ஓட்டுச் சாவடிகள் குறித்தும் தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்' என்றனர். இது குறித்து அரசியல் கட்சியினர் கூறுகையில்,' கவுண்டம்பாளையத்தில், 451 ஓட்டு சாவடிகள் உள்ளன. மொத்தம், 4 லட்சத்து, 60 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகள் மற்றும் அது தொடர்பான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக அந்தந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பின்னரே, தேர்தல் கமிஷன் இது தொடர்பாக இறுதி முடிவு செய்ய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி