உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தத்து குழந்தை மர்ம மரணம்; சடலம் தோண்டி சோதனை

தத்து குழந்தை மர்ம மரணம்; சடலம் தோண்டி சோதனை

கோவை : நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 26 வயது பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டதால் கர்ப்பமடைந்தார். பிப்., 5ம் தேதி, கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால், கோவை அரசு மருத்துவமனை காவலாளி வெங்கடேஸ்வரியிடம் குழந்தையை கொடுத்து விட்டு, இளம்பெண் சொந்த ஊர் சென்றார்.நீலகிரியில் இளம்பெண்ணிடம், கிராம சுகாதார செவிலியர், குழந்தை குறித்து கேட்டபோது, சட்டவிரோதமாக தத்துக் கொடுத்தது தெரிந்தது. நர்ஸ் தகவலில், வெங்கடேஸ்வரி மீது, குழந்தைகள் உதவி மையத்தினர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர். போலீசார், வெங்கடேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், குழந்தை பல்வேறு நபர்கள் வாயிலாக சங்கர் மற்றும் சிவசக்தி தம்பதிக்கு சட்ட விரோதமாக தத்து கொடுக்கப்பட்டது தெரிந்தது. குழந்தை மீட்கப்பட்டு, கிணத்துக்கடவு காப்பகத்தில், கடந்த 10ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் தாய், அவரது ஆண் நண்பர், வெங்கடேஸ்வரி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த, 11ம் தேதி இரவு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, 12ம் தேதி உயிரிழந்தது.சட்டம் சாராத மருத்துவ வழக்காக கருதப்பட்டு, காப்பகத்தினர் வாயிலாக குழந்தையின் சடலம் பொள்ளாச்சி, டீச்சர்ஸ் காலனி அருகே உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. கடந்த, 14ம் தேதி இதுகுறித்து அறிந்த போலீசார், குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வழக்கு பதிந்தனர். நேற்று குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ