வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை
வால்பாறை: வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.வால்பாறை மலைப்பகுதியில், பருவமழைக்கு பின் இரவு நேரத்தில் கடுங்குளிரும், பகல் நேரத்தில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.இதனால், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மக்கள், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, எஸ்டேட் தொழிலாளர்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகளால் நாள் தோறும் அவதிப்படுகின்றனர்.சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வால்பாறையில் குழந்தைகள் முதல் முதியவர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.வால்பாறை அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது.அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:வால்பாறையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.தற்போது வரை யாருக்கும் டெங்கு காய்ச்சல் பரவல் இல்லை. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்பு இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.குறிப்பாக, சீதோஷ்ணநிலை மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, குடிநீரை நன்கு வடிகட்டி காய்ச்சிய பின் குடிக்க வேண்டும். வீடுகளை சுற்றிலும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.