உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல் வராததால் கிரைண்டர் உற்பத்தி பாதிப்பு:குவாரிகள் முடங்கியதன் எதிரொலி

கல் வராததால் கிரைண்டர் உற்பத்தி பாதிப்பு:குவாரிகள் முடங்கியதன் எதிரொலி

கோவை: குவாரிகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதால், கோவை கிரைண்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கிரைண்டர் தயாரிப்புக்கு பெயர் போனது கோவை. கிரைண்டர் மட்டுமல்லாமல் அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பில் 300க்கு மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. 20,000க்கு மேற்பட்டோர் இத்தொழிலை நம்பியுள்ளனர். மாதம் 1.50 லட்சம் கிரைண்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கிரைண்டர் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளே கல் தான். ஊத்துக்குளி, நாமக்கல் பகுதிகளில் இருந்து இதற்கான கற்கள் தருவிக்கப்படுகின்றன. மாதம் சராசரியாக 1.50 லட்சம் கற்கள் தேவைப்படுகின்றன. குவாரிகளின் மீது கனிமவளத்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் கடந்த ஒரு வாரமாக கற்கள் சரியாக வருவதில்லை என்கிறார், கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சவுந்தரக்குமார். '' கடந்த காலங்களில் கற்களின் விலை 20 சதவீதம் உயர்ந்துவிட்டது. ஊத்துக்குளி, நாமக்கல் குவாரிகளில் கற்கள் எடுப்பதை முழுமையாக நிறுத்திவிட்டனர். இந்த வாரத்தில் இருந்து கற்கள் கிடைக்காது என்று சொல்லிவிட்டனர். ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால் தொழில் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். கற்கள் வராவிட்டால் கிரைண்டர் உற்பத்தி 50 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்படும்,'' என்கிறார் அவர். கற்கள் தடையின்றி கிடைக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர்களின் கோரிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ