உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்னி நட்சத்திரம் நாளை ஆரம்பம்! ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் ரெடி 

அக்னி நட்சத்திரம் நாளை ஆரம்பம்! ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் ரெடி 

-- நமது நிருபர் -வரும், 4ல் அக்னி நட்சத்திர வெயில் துவங்க உள்ள நிலையில், ஹீட் ஸ்ட்ரோக் (வெப்ப வாதத்தை) தடுக்க, முன்னெச்சரிக்கையாக, மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, 1.10 லட்சம் ஓ.ஆர்.எஸ்., கரைசல் பாக்கெட் தருவிக்கப்பட்டுள்ளது.வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது ஏற்படும் 'ஹீட் ஸ்ட்ரோக்' மற்றும் நீர்ச்சத்து இழப்பை தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கையை துவங்கவும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை தயார் நிலையில் இருக்கவும், பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.இதற்காக அனைத்து மையங்களிலும், உப்பு, சர்க்கரை அடங்கிய ஓ.ஆர்.எஸ்., கரைசல் இருப்பில் வைக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப நிலையங்களுக்கு, 1.10 லட்சம் ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் தருவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறையினர் கூறியதாவது: கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. தற்போது அனல் தகித்து வரும் நிலையில், அக்னி நட்சத்திர வெயில் பதிவாகும் போது, வெப்பநிலை தற்போதைய நிலையை விட உயர்ந்து, மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால், நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு, திடீர் மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மதிய வேளையில் வெயிலில் அதிக நேரம் செல்வதை, இயன்ற வரை தவிர்க்க வேண்டும். நேரடியாக வெயிலில் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் உள்ள கட்டுமான தொழிலாளர்கள், விவசாயி தொழிலாளர்கள், புறவெளியில் பணியாற்றுபவர்கள் நீர்ச்சத்து தட்டுப்பாடு, வெப்பவாதத்தை தடுக்க, ஓ.ஆர்.எஸ்., கரைசல் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் உள்ள அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப நிலையங்களுக்கும், ஓ.ஆர்.எஸ்., கரைசல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் வாங்கி பயன்படுத்தலாம்.அதீத வெப்பம் காரணமாக சோர்வை உணர்ந்தால், உடனடியாக ஓ.ஆர்.எஸ்., கரைசல் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.திடீரென மயக்கமான ஒருவரை, இயல்புக்கு கொண்டு வருவதில் சிரமங்கள் இருப்பதால், உடலுக்கு தேவையான தண்ணீரை அவரவர் கட்டாயம் வெயில் காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இணை நோய் உள்ளவர்களை கூடுதல் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ