தனக்கு சொந்தமான புன்செய் பூமியை மீட்க நடையாய் நடக்கிறார் முதியவர்
கோவை; சோமையம்பாளையம் நஞ்சுண்டாபுரம், அன்னுார், கீரணத்தம் ஆகிய பகுதிகளில் தனக்கு சொந்தமான, 27 ஏக்கர் புன்செய் பூமியை, சிலர் போலி ஆவணங்களை பயன்படுத்தி, பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்து விட்டதாக, கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்தார், 74 வயது முதியவர். கோவையை அடுத்த பனப்பாளையம் புதுார் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி. அவர் நேற்று கோவை கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'எனக்கு சொந்தமான பூமியை, போலி ஆவணங்கள் தயாரித்து, சிலர் பட்டா பெற்று, கிரையம் செய்துள்ளனர். அப்படி வாங்கிய சொத்துக்களின் தற்போதைய உரிமையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடமிருந்து மீட்டுக்கொடுக்க, 2023 ஏப்., 30ல் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.அந்த உத்தரவை நடைமுறை செய்து, மோசடியாக பதிவு செய்துள்ள பட்டாக்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதன்பின்பு எனது பெயருக்கு, பட்டா மாறுதல் செய்து கொடுக்க வேண்டும்.இதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகிறேன். இது குறித்து விசாரித்து, எனக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.