உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இவர்களும் மனிதர்கள் தானே? பழங்குடி மக்களின் பரிதாப நிலை

இவர்களும் மனிதர்கள் தானே? பழங்குடி மக்களின் பரிதாப நிலை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட, செட்டில்மென்ட்களில் பழங்குடியினர் மக்களுக்கான கான்கிரீட் வீடு கட்டுமானத்தை விரைந்து முடிக்காததால், மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோழிகமுத்தி, எருமைப்பாறை, கூமாட்டி, நாகரூத்து- ---1, நாகரூத்து -2, சின்னார்பதி, பழைய சர்க்கார்பதி, நெடுங்குன்று, வெள்ளிமுடி, கவர்க்கல், சின்கோனா, காடம்பாறை, கீழ்புன்னாச்சி, பாலகணார், பரமன்கடவு, உடுமன்பாறை, கல்லார்குடி தெப்பக்குளமேடு, சங்கரான்குடி என, 18 பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.இங்குள்ள மக்கள், தங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, தனிநபர் வனஅனுபவ உரிமை சட்டத்தின் கீழ், வேளாண், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுதவிர, சமூக வனஅனுபவ உரிமை சட்டத்தின் கீழ், சிறு வனப்பொருட்கள் சேகரம் செய்தும் வருகின்றனர். கடந்த, 2017ம் ஆண்டு முதல், 18 செட்டில்மென்ட்களில், பழங்குடியினர் கோரிக்கையை ஏற்று, இதுவரை, 595 பேருக்கு, அனுபவ உரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, பழைய நாகரூத்து நீங்கலாக, 17 செட்டில்மென்ட் பகுதி மக்களுக்கு, சமூக வன அனுபவ உரிமை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில், கோழிகமுத்தியில் --- 31, கூமாட்டி --- 22, எருமைப்பாறை --- 9, நாகரூத்து 1-ல் --- 23, நாகரூத்து 2ல் --- 15 வீடுகள் என, மொத்தம், 100 வீடுகள் கட்டப்படுகின்றன. இதற்காக, அப்பகுதி மக்கள், ஏற்கனவே அமைத்திருந்த தகரக் கொட்டகை மற்றும் பிளாஸ்டிக் கவர் போர்த்தியிருந்த குடியிருப்புகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.குடியிருப்புக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படாத நிலையில், அருகிலேயே தற்காலிகமாக, தகர ஷீட் அமைத்து வசிக்கின்றனர். தற்போது மழை பெய்வதால், மக்கள் செய்வதறியாது உள்ளனர். உறங்கவும், சமைத்து சாப்பிடவும் முடியாமல் பரிதவிக்கின்றனர்.மா.கம்யூ., ஆனைமலை தாலுகா குழு செயலாளர் பரமசிவம் கூறியதாவது:சின்னார்பதி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழும் குடியிருப்பில், கான்கிரீட் வீடுகள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக, அவர்கள் தங்கியிருந்த இடத்தை காலி செய்து, அதன் அருகிலேயே தற்காலிகமாக தகரக் கொட்டகை அமைத்துள்ளனர்.பழங்குடி மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில், வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது, பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. மழைக்கு, ஒதுங்க இடமில்லாமல் தவிக்கின்றனர்.துறை ரீதியான அதிகாரிகள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கான்கிரீட் வீடு கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில் மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்து, போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, கூறினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் கூறுகையில், 'மலைப்பகுதியில் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும், 4 லட்சத்து, 95 ஆயிரத்து, 430 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை