சாதித்த அரசு பள்ளி மாணவியருக்கு உதவி
அன்னுார்: சாதித்த அரசு பள்ளி மாணவியருக்கு, நிதி உதவி வழங்கப்பட்டது. காட்டம்பட்டி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஹரி ஸ்ரீ க்கு, 'லேப் டாப்' வழங்கப்பட்டது. கடந்தாண்டு 12ம் வகுப்பு படித்து, பி.எஸ்.சி., செயல்முறை மருத்துவ பட்டப்படிப்பு சேர்ந்துள்ள மாணவி ஆரத்திக்கு, கல்வி கட்டணம் கட்ட 35 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. வி.பி.எஸ். நாதன் பவுண்டேஷன் சார்பில், நிதி உதவி வழங்கிய, அதன் நிறுவனர் சுவாமிநாதன், பொருளாளர் ஹரி மோகன் குமார், தலைவர் சபாபதி, செயலாளர் வேலுச்சாமி ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகர் நன்றி தெரிவித்தார்.