பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்
கோவை: இந்திய அரசியல் சட்டத்தில், தலித் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், கோவை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.இது குறித்து, அமைப்பின் மாவட்ட செயலாளர் அசரப்அலி கூறியதாவது: இந்தியா முழுவதும் தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்திட, சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய வன்கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க, தனியாக சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்க வேண்டும். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை, உடனே நிரப்ப வேண்டும். பட்டியல் சாதி சிறப்பு திட்டத்துக்கான நிதி, முறையாக செலவிடப்படுகிறதா என, கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில், 50க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.