உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலித்தீன் பயன்பாடு தவிர்க்கணும்! வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

பாலித்தீன் பயன்பாடு தவிர்க்கணும்! வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

வால்பாறை; கடைகளில் பாலித்தீன் பயன்பாடு தவிர்க்க வலியறுத்தி, நகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வால்பாறை நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 'துாய்மையே சேவை' என்ற தலைப்பில், பள்ளி, கல்லுாரி மற்றும் பொது இடங்களில் துாய்மையை பேணிக்காக்கும் பணிகள் நடக்கிறது. நகராட்சி பாலித்தீன் சேகரிப்பு இயக்கத்தின் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். வால்பாறை நகரில் உள்ள கடைகளில் பாலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனக்கூறி நகராட்சி பணியாளர்கள் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நகராட்சி அதிகாரிகள் பேசியதாவது: வால்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. அதன்பின், மறுசுழற்சி செய்யப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. பொதுமக்கள், சுற்றுலா பயணியர் சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பயன்படுத்துவதை தவிர்த்து, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் கடைகளுக்கு வரும் போது, பாலித்தீன் பயன்படுத்தக்கூடாது என அறிவுரை வழங்க வேண்டும். வால்பாறையின் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க துணி பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடை மற்றும் வீடுகளில் வெளியாகும் குப்பையை பொதுமக்கள், வியாபாரிகள் தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இவ்வாறு, பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !