பொள்ளாச்சி: பாலிடெக்னிக் கல்லுாரிகள், கல்லுாரிகளில், சாலை பாதுகாப்பு சங்கம் துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துகளை தடுக்க சங்கம் துவங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சாலை விபத்துகள் தடுக்க, பாலிடெக்னிக் கல்லுாரிகள், கல்லுாரிகளில், சாலை பாதுகாப்பு சங்கம் துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், ஐந்து மாணவர்கள், தலைவராகவும், 100 மாணவர்கள் உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள் வாயிலாக, மற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சங்கம் துவங்கப்படுகிறது. பொள்ளாச்சி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகள், மற்ற கல்லுாரிகளிலும் சாலை பாதுகாப்பு சங்கம் துவங்கும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் கூறியதாவது: பாலிடெக்னிக், மற்ற கல்லுாரிகளிலும், சாலை பாதுகாப்பு சங்கம் துவங்கப்படுகிறது. அதில், ஐந்து மாணவர்கள் தலைவராகவும், அதன் கீழ் மாணவர்கள் உறுப்பினர்களாகவும் சேர்க்கப்பட உள்ளனர். இந்த சங்கத்துக்கு கல்லுாரியை சேர்ந்த, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி அறிந்த அலுவலர், ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட உள்ளனர்.திட்டம், நடவடிக்கைகளை சங்க உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் விளக்க வேண்டும். இந்த சங்கம் துவங்குவதன் நோக்கம், மாணவர்களிடம் 'டிராபிக்' ஒழுங்குப்படுத்துதல், விதிகள், சாலை பாதுகாப்பு, பாதுகாப்பான வேகம், வாகனம் இயக்குதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படுகிறது. சாலை விபத்துகள், அதற்கான காரணங்கள், வாகனங்கள் இயக்குவதற்கான தகுந்த வயது குறித்தும் விளக்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு சங்க கூட்டம் நடத்துதல், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு கல்லுாரிகளிலும், ஒரு ஆண்டுக்கு, 40 மணி நேரம் இதற்காக ஒதுக்க வேண்டும். 'ஆன்லைன்' வாயிலாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறுந்தகவல்கள், போஸ்டர்ஸ், 'ஆன்லைன்' கருத்தரங்கம், சாலை பாதுகாப்பு வினாடி - வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 'ஆப்லைன்' முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, கருத்தரங்கம், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அருகே உள்ள 'டிராபிக் கன்ட்ரோல்' அறைகள், அவசர கால மையம், விபத்து சிகிச்சை மையம், ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார். முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் கூறுகையில், ''சாலை விபத்துகளை தடுக்க கல்லுாரிகளில் இந்த சங்கம் துவங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. கல்லுாரி நிர்வாகத்தினரிடமும் இது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. சங்கங்களை துவங்கி முறையாக செயல்படுத்தவும், அதற்கான நேரத்தை ஒதுக்கீடு செய்யவும் கல்லுாரிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
சிறந்த சங்கத்துக்கு பரிசு!
கல்லுாரிகளில் துவங்கப்படும் சாலை பாதுகாப்பு சங்கத்தில், சிறந்த சங்கம் தேர்வு செய்யப்பட வேண்டும். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் சங்கத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசும், சான்றிதழும், இரண்டாமிடம், 7,000 ரூபாய், சான்றிதழும்; மூன்றாமிடத்துக்கு, 5,000 ரூபாய், சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாநில அளவில் முதலிடம் பெறும் சங்கத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு, கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாமிடத்துக்கு, 75,000 ரூபாய், மூன்றாம் இடத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு, கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும், என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.