திறன் மேம்பாட்டு பயிற்சியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தனர். விவசாயிகளின் வேளாண் தொழில்நுட்ப அறிவையும், செயல் திறனை மேம்படுத்தும் வகையில், மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர் சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொள்ளாச்சி அருகே சமத்துார், கூளநாயக்கன்பட்டி பகுதிகளில் நடந்தது. ‘விளைநிலம் காப்போம்’ என்ற கருத்தை மையமாக கொண்டு, மண்வள பாதுகாப்பு, மண்ணின் ஆரோக்கியத்தை பேணுவதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும், நடமாடும் மண் பரிசோதனை வாயிலாக மண் மாதிரிகளை பரிசோதிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், வேப்பங்கொட்டை கரைசல், ஜீவாமிர்தம் ஆகியவற்றின் தயாரிப்பு முறைகள், பயன்பாடுகள் மற்றும் பயிர் பாதுகாப்பில் அவற்றின் பங்கு குறித்து மாணவியர் விளக்கமளித்தனர். மக்காச்சோள பயிரில் பின்பற்ற வேண்டிய சாகுபடி முறைகள், உரமிடும் தொழில்நுட்பங்கள், முக்கிய பூச்சிகளை கண்டறிதல், அவற்றை கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இயற்கை வழி பயிர் பாதுகாப்பு மற்றும் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிலையான வேளாண்மை மற்றும் விளைநிலை பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு தகவல்கள் விவசாயிகளுக்கு பகிரப்பட்டது.