பின் குறிப்பு
ஆப்னே பனாயா வியாழன் காலையில் இந்தியா முழுவதும் பல நூறு நாளிதழ்களில் முதல் பக்கம் ஒரே விளம்பரம் பிரசுரமாகி இருந்தது. ஜியோ பிளாட்பாம் நிறுவனம் வெளியிட்டது. பங்கு சந்தையில் அந்த நிறுவனம் சேர்ந்தது. அறிவிப்பு வெளியானதுமே ஒரு கோடி 40 லட்சம் பேர் ஜியோ பங்கு கேட்டு விண்ணப்பித்தனர். இது உலக சாதனை. 79.62 லட்சம் பேர் பங்குதாரர் ஆனார்கள். அதுவும் ஒரு சாதனை. அதை கொண்டாடவும், சாதனைக்கு காரணமான மக்களுக்கு நன்றி சொல்லவும் வெளியிடப்பட்டது தான் அந்த விளம்பரம். அதன் வாசகம்: தேங்யு இந்தியா. ஜியோ ஆப்னே பனாயா. ஆப்னே பனாயா என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று பலருக்கு தெரியவில்லை. ஆப்னே என்றால் நீங்கள். பனாயா என்றால் உருவாக்கினீர்கள். ஜியோ ஆப்னே பனாயா என்றால், ஜியோவை நீங்கள் உருவாக்கினீர்கள் என்று பொருள். இந்த வாசகத்தின் பின்னணி சுவாரசியமானது. ஆஷிக் பனாயா ஆப்னே என்ற திரைப்படம் 2005ல் வெளியானது. அதன் டைட்டில் சாங் பாடியவர் இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா. செம சீன். அதனால் பாடல் மெகா ஹிட். “ஆஷிக் பனாயா, ஆஷிக் பனாயா, ஆஷிக் பனாயா ஆப்னே..” என்ற வரி அன்றைய இளைஞர் உலகத்தை வாரி சுருட்டியது. ஆஷிக் என்றால் காதலன். என்னை உன் காதலனாக மாற்றி விட்டாய்! என்று பாடாத ஆண் உதடுகள் கிடையாது. கால ஓட்டத்தில் ஆப்னே பனாயா என்ற இரு சொற்களை மட்டும் டெம்ப்ளேட் ஆக்கி, காதலன் என்பதற்கு பதிலாக வேறு வார்த்தைகளை போட்டு பயன்படுத்த ஆரம்பித்தது ஜென்சீ வகையறா. முட்டாள், கழிசடை, ரவுடி இத்யாதி. இன்ஸ்டாவும் டிக்டாக்கும் இந்த ரீமிக்ஸ் வேலைக்கு ஒத்துழைத்ததால், ’இது எப்டி இருக்கு?’ மாதிரி இன்றுவரை பாப்புலராக சுற்றுகிறது. ஜியோவின் ஓனர்கள் முகேஷ் அம்பானியின் பிள்ளைகள். ஆகாஷ், அனந்த், இஷா. தாங்கள் உருவாக்கிய நிறுவனத்தை மூன்றே வார்த்தைகளில் இந்தியர்களின் சொத்தாக சித்தரித்த சாமர்த்தியம் அபாரமானது. சரி, ஜியோ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? “நல்லா இரு!” என்று நம் பெரியவர்கள் வாழ்த்துகிறார்களே, அது தான். வாழு, வாழ்க என்றும் மீனிங் சொல்வார்கள். ஜியோ அவுர் ஜீனே தோ என்பது வடக்கே வீடு கடைகளில் பார்க்கக்கூடிய ஸ்டிக்கர் வாசகம். வாழு, வாழ விடு என்பது அர்த்தம்.