யானை தும்பிக்கை உரசி பாகன் காயம்
வால்பாறை, : மானாம்பள்ளியில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானையை குளித்த வைத்த போது, தும்பிக்கை உரசியதில், பாகன் காயமடைந்தார்.உலாந்தி வனச்சரகத்துக்கு உட்பட்ட வரகலியாற்றில், வனத்துறை சார்பில், 25 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரகலியாற்றில் பராமரிக்கப்பட்டு வந்த பரணி, உரியன், சின்னதம்பி, சுயம்பு, சூரியா ஆகிய ஐந்து கும்கி யானைகள், வால்பாறை அடுத்துள்ள மானாம்பள்ளியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், நேற்று பரணி என்ற யானையை குளிக்க வைக்கும் போது, யானையின் தும்பிக்கை உரசியதில், பாகன் மணிவேல், 35, தடுமாறி விழுந்து லோசான காயத்துடன் தப்பினார். அவருக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.