உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருப்பணிகளுக்கு முன் கோவிலில் பாலாலய பூஜை

திருப்பணிகளுக்கு முன் கோவிலில் பாலாலய பூஜை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ரூ.5.30 கோடி மதிப்பில், கோபுரம், மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடப்பதையடுத்து, பாலாலயம் அமைத்து, அதில் அம்மன் சுவாமி எழுந்தருளும் பூஜைகள் நடந்தன. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் முன்பாக, ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடக்கின்றன. சுற்றுப் பிரகார மண்டபம் கட்டப்பட்டுள்ளன. கோவிலில் இருந்து பவானி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், மழை மற்றும் வெயிலில் அவதிப்படாமல் இருக்க, நடைபாதை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் சுவாமி சன்னதி, கோபுரம், மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை, 5.30 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் அமைக்கும் பணிகள், கடந்த ஏழாம் தேதி கணபதி ஹோமம் பூஜையுடன் துவங்கின. நேற்று முன்தினம் முதல் யாக வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9:00 மணியிலிருந்து 10:00 மணி வரை இரண்டாம் யாக வேள்வி பூஜைகள் செய்த பின், கலசம் புறப்பாடாகி வனபத்ரகாளியம்மன் பாலாலயம் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிற பாலாலயங்களிலும் பிரதிஷ்டை நடத்தப்பட்டன. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில், கோவில் தலைமை பூசாரி நவீன், நாச்சிமுத்து ஆகியோர் பாலாலய பூஜைகளை செய்தனர். கோவை ஹிந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் ரமேஷ், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், கோவில் தக்கார் நந்தகுமார், உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி உட்பட அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ